கருணை
கருணை என்கின்ற பேரறிவு ஒரு மனிதனுக்கு சித்திக்க வேண்டும் எனில் முதலில் ஆன்மாவினை உணர்ந்து, மலர்ந்து, அதன் அன்பினில் திளைத்து, பெற்ற பேற்றினை பகிர்ந்து, வாழ்ந்திட அறிந்திடல் வேண்டும். தான் பெறுகின்ற ஒவ்வொரு துளி அன்பினையும் பகிர்ந்து வாழ்ந்திட வேண்டுமெனில், கருணை எனும் பேரறிவு உட்கலக்க வேண்டும். அதற்கான பயிற்சிகளையும், முயற்சிகளையும் ஏற்றால் மாத்திரமே சிற்றறிவு அன்புடன் இணைந்து பேரறிவாக உருமாறிடும்.
மனிதர்களின் அறிவும் அன்பினால் பூக்க வேண்டும். அன்பான அறிவு ஒன்றே சுயநலமற்றது, ஆன்மாவின் அறிவு ஒன்றே கருணையானது. அறிவு என்பதே ஒரு மனிதனை இயக்குகின்றது. உடலின் அறிவு உடல் தேவைகளை உணர்த்துவது போன்று, உயிரின் அறிவு அதன் ஆசைகளை உணர்த்திடும். இவற்றை மனிதர்கள் பூர்த்தியுற செய்த பின்னரே ஆன்மா தனது கருணையினை பொழிந்து பிரபஞ்ச பேரறிவினை நுண்ணியமாக உணர்த்த துவங்கிடும்.
அன்பாலய பிரவேசம் என்பது ஒவ்வொரு மனிதர்களும் தனது ஆன்மா எனும் இறைவனை உணர்ந்து, சாட்சி பொருளாக இயங்குகின்ற ஆன்மாவின் பேரறிவினை தனது உயிரின் இயக்கத்தினில் கலந்து, மானுட ரூபம் ஏற்ற இறைவனாக வாழ்வது ஒன்றே உயர்வான நிலையாகும். அன்பு என்னும் ஆலயத்தினை தனது இல்லமாக ஏற்று வாழ்பவர்கள் யாவரும் கருணை எனும் பேரறிவினை பெற்று உலக மானுடர்களை உய்விக்கவும் உதவிடுவர் என்பது திண்ணம்.
அகத்தீசனாகிய யாமே பூரண குருவாய் மலர்ந்துள்ள நிலையில், அன்பாலய பிரவேசம் கண்டு, இறைதன்மைகளை அன்பின் வடிவாய் உணர்ந்து, இறைவனின் பேரறிவினை காருண்யமாய் நுகர்ந்து, முயற்சிகள் இன்றி காருண்யத்தை ஏற்று விடவும் துணை புரிவோம்.
கருணை எனும் பேரறிவு ஆற்றலை ஏற்றவர்கள், காக்கும் தொழிலினை ஏற்றிட்ட இறைவனுக்கு ஒப்பாவர். பல மானுடர்களை இன்னல்களில் இருந்து மீட்டு பேரறிவினை பொழிந்து காத்திடும் அற்புத ஆற்றலினை பெற்றிட எமது அறிவுரைகளை ஏற்று, வாழ்வினிலே பயின்று உன்னத நிலைகளை எய்திடுங்கள். வாழ்த்துகின்றேன்.
அருளியவர்
அகத்திய மகரிஷிகள்
கருணை எனும் தலைப்பின் கீழ் தியானம், வாழ்வியல் வகுப்பு, போற்றி தொகுப்பு மற்றும் வலைப்பதிவு பகிரப்படும்.