அன்பு
அன்பு எனும் இறை அருள், பூத்த பூக்களுக்கும் பழுத்த கனிகளுக்கும் அருட் சுவையினை ஊட்டிடும். தன்னிலை உணர்ந்து, அன்பு எனும் ஆன்மாவின் எரிபொருளினால் இயங்குபவர்கள் யாவரும் அன்பாலயத்தின் அன்பு எனும் படைத்தல் தொழிலினை உணர்ந்து ஏற்கும் படைப்பாளிகளாவர். இறைவன் எண்ணற்ற செய்திகளை அனுதினமும் மனிதர்களுக்கு அருளிய வண்ணமே உள்ளர். பூத்து, கனிந்து, அன்பினால் நிறைந்த ஆன்மாக்களே இறை செய்திகளை பூரணமாக ஏற்றுக் கொள்ள இயலும்.
இறைவன் மாந்தர்களை கலியிலிருந்து விடுவிக்க இறைத்தூதர்களை மானுட ரூபம் ஏற்கச் செய்திடுவார். மனிதர்களோ, இறைவனின் தூதுவர்களை கண்டறிய மறந்து விடுகின்றனர், மறுத்துவிடுகின்றனர். அஞ்ஞான திரைகளே மூல காரணமாகின்றது. அன்பு எனும் ஆலயத்தினுள் பிரவேசித்துவிட்டால், பல இறைதூதர்கள் உங்களை சூழ்ந்து நிலை இருப்பதனை உணரலாம்.
இறுதியில் இறைவனின் அருள் என்னும் ஆசிகளை பெற்று, ஒவ்வொருவருமே இறைத்தூதர்களாக மலரலாம். மலர்ந்து நின்றிருக்கும் ஒவ்வொரு இறைத் தூதுவர்களும் மற்ற ஆன்மாக்களுக்கும் ஆன்ம அன்பினில் திளைத்து இறைவனை சென்றடைய உதவிட வேண்டும். எந்த ஒரு ஆன்மாவும் அன்பினால் மலரும் வரை இறைவன் அருளுகின்ற செய்திகளை இறை தூதர்களின் மூலம் ஏற்று பக்குவம் அடைதல் வேண்டும். பக்குவத்திலும் பல படிநிலைகளைக் கடந்தால் மாத்திரமே, ஆன்மாவானது பரமாத்மாவுடன் பூரண ஐக்கிய நிலையினை ஏற்று விட இயலும்.
பொழிகின்ற மழை நீரானது பூமியின் எப்பகுதியிலும் சீறாய் நிறைந்திருக்கும் எனினும், தாமரை பூக்கின்ற தடாகங்களே புண்ணியத்தினை ஏற்கும். அவ்வகையில் அன்பாலயத்தினில் பொழியப்படும் இறைசக்தி எனும் மழை நீரானது அழகிய தாமரைகளை இனிமையாய் பூக்க செய்திடும்.
மனிதர்கள் யாவரும் பக்குவ நிலைகளை எய்தி நின்றால், இறை அருளினை பெறலாம், ஆன்மாவின் அன்பினில் திளைக்கலாம், பரமாத்மாவின் மோட்ச வீட்டினையும் சென்றடையலாம். சத்ய யுக கதவுகள் உங்களுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையினில், அதனுள் பிரவேசித்து சத்தியம் உணர்ந்து, சத்ய யுக வாசிகளாக உருமாறி ஆனந்த சாகரத்தில் மூழ்கி பேரானந்த இறையருளினை பெற்று, தான் பெற்ற இன்பத்தினை அன்பாய் இவ்வையகத்துடன் பகிர்ந்து உயர்நிலைகளை அடைந்திடவே வாழ்த்துகின்றேன்.
ஆசிகள் பல பல.
அகத்திய மகரிஷிகள்