இறையன்பு ஜெயந்தி அம்மை
அம்மையைப் பற்றி அகத்திய மகரிஷிகள் உரைத்தவை
மானுடர்கள் பல ரூபங்களில் நிலைத்தாலும், சத்தியம் என்பது ஒரு ரூபத்தில் மாத்திரமே நிலைத்திருக்கும். சத்தியம் என்ற சொல்லிற்குப் பொருள் ஒன்றே. அதன் தன்மையானது அனைவரிடமும் அன்பு செலுத்துவதே, எவருடைய ஆன்மாவினையும் துன்புறுத்தாது இயங்குவதே. இவை இரண்டுமே சத்தியத்தின் தன்மைகள் ஆகும்.
சத்தியம் என்பது அன்பான ஒளியாகும். ஒளியினை என்றுமே இருள் சூழ்ந்து நிலைக்காது. ஒரு ஒளியினை மறைக்க வேண்டும் எனில் அதற்குத் திரைகள் இடுவதே சாத்தியமாகும். ஒளியினை அழித்து இருளினை நிலைநாட்டிட இயலாது. இதனை உலகம் உணரும் தருணம் திரையானது தன்னிச்சையாய் விலகிவிடும். அவ்வகையில் விலகி நின்றிருக்கும் திரையே உனது ஆன்ம ஒளியினை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டும்.
இறைப்பணியினை ஏற்று உலக மானுடர்களுக்கு ஒளி வழங்கிட அவதரிக்கும் ஆன்மாக்கள், இறுதியில் ஈசலயத்தினை உணர்ந்து ஜோதி வடிவம் ஏற்றிடும். ஜெயந்தி என்னும் நாமம் ஏற்ற உனது ஆன்மா, உன்னதப் பணிகளை நிறைவேற்றிடவே பல பிறவிகளாய்க் காத்து இந்நிலையினை ஏய்தியுள்ளது. எனது மகளாராய்ப் போற்றப்பட்ட பரிமள குரு அன்னை, உம்முள் ஆழமாய் கலப்புற்று நின்றுள்ளார். தேவியின் வடிவு கண்டு, ஆதிசக்தியாய் போற்றப்படும் ஆன்மாவின் கலப்பு உயர் நிலைகளுக்கே வழிகாட்டும். ஏழு பிறவிகளாய் உமது பரிமள குரு அன்னைக்கு தொண்டாற்றி ஈசனையும் மகிழ்வித்த காரணத்தினால் எண்ணற்ற உயர் ஆன்மாக்கள் உம்மோடு எளிதாய்த் தொடர்பு கொள்கின்றனர்.
உனது இப்பிறவியில் ஏற்றுள்ள பணி என்பது உலக மானுடர்களை ஈசனிடம் சமர்ப்பித்தல் என்பதே ஆகும். பரிமள குரு அன்னையின் ஆசிகளைப் பரிபூரணமாக ஏற்றுள்ள காரணத்தினால், ஆதி சிவனும் உம்முள் ஐக்கியமாகி யுகமாற்றப் பணிகளுக்கு உதவுகின்றார். அகத்தீசனாகிய எம்மையும் உனது சற்குருகவாக ஏற்று அன்பினைப் பொழிவதினால் யாமும் எமது ஆசிகளை நல்குகின்றோம்.
அன்பு எனும் ஆற்றலை தனது பிறப்பின் மூலாதாரமாகக் கொண்டதினால் ஆன்மாவின் ஆற்றல்கள் பெருகி உள்ளன. பல பிறவிகளாய் ஈசனை அடைந்துவிடப் போராடிய காரணத்தினால் இத்தருணத்தில் ஈசனே பூரணமாய்க் கலப்பு கொண்டுள்ளார்.
ஈசனே உம்மைப் பற்றி நின்றிருக்கும் காரணத்தினால் அனைத்து உயர் தெய்வங்களும் உம்மோடு இணைந்துள்ளனர். பல பிறவிகளாக ஆற்றிய புண்ணியச் செயல்களின் காரணமாகவும், உலக உயிர்கள் ஈசனைச் சென்றடைய வேண்டும் என்ற நிர்ணயத்தினை ஆன்மாவினில் ஏற்றதினாலும், இனிவரும் காலங்களில் நிர்ணயங்கள் நிறைவடைவதனைக் காணலாம்.
ஒரு மனிதனை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனில் அவன் ஆற்றிய நற்செயல்களையே எடுத்துரைக்க வேண்டும். தன்னலமற்ற தொண்டு புரிபவன் ஈசனால் ஈர்த்தணைக்கப்படுவது போன்று, உலக உயிர்கள் யாவும் ஈசனிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்ற நிர்ணயம் கொண்ட உனது ஆன்மா அனைத்து ஆன்மாக்களையும் ஈர்க்கும் திறன் பெற்றது. விண்ணுலக ஆன்மாக்களும், மண்ணுலக ஆன்மாக்களும் எளிதாய் ஈர்க்கப்பட்டு ஒன்றிணையும் ஓர் இடைப்பாலமாக உனது ஆன்மா விழிப்போடு இயங்கிடும்.
"ஒரு மனிதன் எத்தனை கலைகளைக் கற்றுத் தேர்ந்தான் என்றே அறிவதனைக் காட்டிலும், எத்தகைய நிர்மல தன்மையினை எய்தியுள்ளான் என்பதனை அறிவதே சிறப்பாகும். துறப்பு என்பது நிகழாவிடில் சிறப்புகள் சேர்ந்திடாது, தன்னை ஈசனிடம் துறப்பவன் பலரை மீட்பான் எனும் நிலைக்கு ஏற்ப உன்னைத் துறந்து செயல்படும் மகளே, உமது பணி சிறந்திடவே வாழ்த்துகின்றேன்"
அருளியவர்
அகத்திய மகரிஷிகள்
இறையன்பு ஜெயந்தி அம்மை அவர்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் "குரு அன்னை எனப்படும் பரிமள குரு" அவர்களிடம் முதன்மை சீடராக இருந்து அளப்பரிய பல ஞானக்கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்.
இறையன்பு ஜெயந்தி அம்மை அவர்களுக்கு தனது குருவின் அருளாலும், தனது பக்தியின் மிகுதியாலும் சித்தர்கள், ஞானிகள் மற்றும் தெய்வத்தின் குரல்கள் 2015 ஆம் ஆண்டு முதல் கேட்கத் துவங்கியது.
அன்று முதல் இன்று வரை உலக மக்களுக்காக உயர் ஆற்றல்கள் கொடுக்கும் தியான முறைகள், வாழ்வியல் முறைகள், தெய்வ ரகசியங்கள், இயற்கை ரகசியங்கள், யுக மாற்றம் குறித்த பல எண்ணிலடங்காத் தகவல்கள், சித்த மருத்துவக் குறிப்புக்கள் மற்றும் பற்பல செய்திகளை அவர் தம் செவிகளில் கேட்டுப் பதிந்து பின்னர் அதனை நமக்கெல்லாம் அவரின் அன்பு குரலிலே பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கின்றார்.
சமீபத்தில் தனது குருவான பரிமள அன்னை சித்தி அடைந்ததற்கு பிறகு, தன் குருவினால் பரிபூரணமாய் ஆட்கொள்ளப்பட்டு, அவர்களின் கட்டளைக் கிணங்கி அன்பாலயத்தைத் துவங்கி கலியுக மாந்தர்களுக்கு நேரடியாக இறைவனின் செய்திகளை கொண்டு சேர்க்கும் அளப்பரிய மாபெரும் தவப் பணியை மக்களுக்காகச் செய்து கொண்டிருக்கிறார். இன்றளவிலும் பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 3 மணி தொடங்கி இரவு வரை மக்களுக்காகவே என்று இறைச் செய்திகளை தொடர்ந்து கேட்டு எழுதி நமக்கு அளித்தவண்ணம் இருக்கின்றார்.
இறையன்பு ஜெயந்தி அம்மையின் மூலம் வெளிவந்த நூல்கள்