ஆத்ம காயத்ரி நோன்பு
01.11.2024 ஆம் தேதி முதல்
19.12.2024 ஆம் தேதி வரை
ஆத்ம காயத்ரி மந்திர விளக்கம்
இம்மந்திரத்தின் நோக்கம்
--------------------------------------
அகத்தில் உறைகின்ற ஈசனாகிய எனது ஆன்மாவே இப்புவியினில் உழல்வதற்கு உனக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் நிறைவுறப் போகின்றது என்பதனை ஆன்மாவிற்கு நினைவூட்டி விழிப்படையச் செய்வதே இம்மந்திரத்தின் நோக்கமாகும்.
ஆன்மா என்கின்ற அணுவே உங்களுடைய குருவாக செயல்புரிந்து வழிகாட்ட வேண்டும்.
சுருங்கிய பொருள்
-------------------------
எனது ஆன்மாவே நீ பரமாத்மா எனும் மூலத்தினை சென்றடைய வேண்டிய காலம் உதித்துள்ளது. விழித்துக்கொள்
உரைப்பதால் பயன்
---------------------------
9 முறை உரைத்தால் ஆக்க சக்தியும்
18 முறை உரைத்தால் காத்தலெனும் சக்தியும் உருவாகும்.
27 முறை உரைத்தால் அழித்தல் எனும் கழிவு நீக்கம் ஆற்றலும் பெருகும்.
பொருள் உணர்ந்துவிடல் நன்று. அகத்து ஈசன் என்பது உங்களுடைய ஆன்மாவினையே குறிக்கின்றது.
ஆத்ம காயத்ரி நோன்பு தொடங்கும் முறை
நோன்பு ஏற்கும் குடும்பம், மற்ற உறவினர்கள், நண்பர்களை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு விநாயகர் சன்னதிக்கு செல்லுங்கள். ஆலயத்தில் உள்ள விநாயகரை தரிசித்து, ஏற்கவுள்ள ஆத்ம காயத்ரி நோன்பு, முழு பலனை அருள வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்.
பின், கைகளில் நீரினை ஏந்தி “ஓம் ஸ்ரீ ஆதி மூல கணபதியே போற்றி” என்று உரைத்து, நீரினை பாதம் படாத இடத்தில், நிலத்தினில் சமர்ப்பிக்கவும். இதே போன்று 3 முறை செய்யவும்.
“ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி” என்று 3 முறை உரைத்து, ஸ்ரீ கால பைரவரின் காப்புக் கயிற்றை உங்கள் வலது கரத்தில் கட்டிக் கொள்ளவும்.
கோவிலில் ஓர் அமைதியான இடத்தைத் தேர்வு செய்து, அவ்விடத்தை நீரினால் சுத்தம் செய்யவும்.
பின், அவ்விடத்தில் ஒரு மரப்பலகையினை ஆசனமாக வைத்து, அதில் அரிசி மாவினால் முக்கோண வடிவில் மூன்று புள்ளிகளை வைக்க வேண்டும். (கீழே இரு புள்ளிகளும், மேலே ஒரு புள்ளியும் இருக்கும் விதமாக, ஃ எழுத்து போல) ஒரு புள்ளியை ஆதி சக்தியாகக் கருதி, “ஓம் ஸ்ரீ ஆதி சக்தியே போற்றி” என்று மும்முறை உரைத்து, அரிசிமாவினால் ஒரு புள்ளியை வைக்கவும். பின், மற்றும் ஓரு புள்ளியை ஆதி சிவனாகக் கருதி “ஓம் ஸ்ரீ ஆதி சிவனே போற்றி” என்று மூன்று முறை உரைத்து வைக்க வேண்டும். இவ்விரு புள்ளிகளையும் ஒருங்கிணைத்து, "தத்துவமசி" எனும் ஆற்றலைப் பொழியும் சத்குருவாகிய அகத்திய மகரிஷிகளைத் தொழுது "ஓம் ஸ்ரீ கல்கி அகத்திசாய நமோ நமஹ” என்று மூன்று முறை உரைத்து மூன்றாவது புள்ளியை வைக்கவும். பின் மூன்று புள்ளிகளையும் இணைக்கும் வகையில், அரிசி மாவினால் முக்கோணம் வரைந்து, மூன்று அகல் விளக்குகளை மூன்று புள்ளிகள் மீது உள்முகமாக வைத்து, தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். அரிசி மாவினால் வரைந்த முக்கோண வடிவத்திற்குள் முழுமையாக அக்ஷதை அல்லது மலர்களைப் பரப்பி சமர்ப்பணம் செய்து கொள்ளுங்கள்.
அன்ன ஆகாரம் அல்லது கனிகளை தீப ரூபங்களில் இருக்கும் உயர் சக்திகளுக்குப் படைக்கவும். அத்துடன், ஒரு மண் குவளையில் நீர் நிரப்பி அருகில் வைத்துக் கொள்ளுங்கள். (அனுதினமும் அன்னத்தைப் படைத்து பின்னர் உண்ண வேண்டும். இயன்றவர்கள், 48 தினங்களும் ஒருமுறை அன்ன ஆகாரமும், ஒரு முறை கனிகளையும் படைத்து உண்பது பெரும் பலனை நல்கிடும். கரிசிலாங்கண்ணி எனப்படும் மூலிகைத் தாவரத்தினை எவ்விதமேனும் உண்டு வர உடல் கழிவுகளும் நீங்கும்)
பின், கைகளில் நீரினை ஏந்தி "எமது உயிரின் தேவைகள் பூர்த்தி அடைந்து, உயிரும் ஆன்மாவும் ஒன்றிணைந்து சிவசக்தி ரூபம் ஏற்று, தத்துவமசியாக நிலைக்க வேண்டும்" என்று பிரார்த்தித்து, முக்கோண வடிவத்திற்குள் பரப்பப்பட்டுள்ள அக்ஷதை அல்லது மலர்களின் மேல் சமர்ப்பியுங்கள்.இப்படி மூன்று முறை செய்யவும். மீண்டும் கைகளில் நீர் ஏந்தி, “இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் முக்தி அடைய வேண்டும்” என பிரார்த்தித்து முக்கோண வடிவத்திற்குள் பரப்பப்பட்டுள்ள அக்ஷதை அல்லது மலர்களின் மேல் சமர்ப்பியுங்கள். இதையும் மூன்று முறை செய்யவும்.
விளக்கு தீபங்களைப் பார்த்தவாறு அமர்ந்த பின் ஆதி சக்தி, ஆதி சிவன், சத்குரு அகத்திய மகரிஷிகள் மற்றும் ஸ்ரீ காலபைரவரின் அஷ்டோத்திரத்தினை பொறுமையாக மனம் உருகி பாராயணம் செய்யுங்கள்.
பின், கண்களை மூடி, கவனத்தை உங்கள் தலையின் உச்சியில் செலுத்தியபடி, ஆத்ம காயத்ரி மந்திரத்தினை எண்ணற்ற முறை உரைக்கவும். (குறைந்தது 27 முறை உரைத்திருக்க வேண்டும்) இறுதியாக, ஆசனத்தில் இருக்கும் விளக்கு தீபங்களுக்கு பக்தியுடனும், சரணாகத மனநிலையிலும் தூப தீப ஆராதனை செய்து வழிபடுங்கள், பிறகு அனைவரும் சக்தி வாய்ந்த அபிஷேக திருநீற்றை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.
கூடி நின்று ஆற்றல் வழங்கிய உங்களுடைய உற்றார் உறவினர்களுக்கு, இறைவனுக்கு படைத்திட்ட அன்ன ஆகாரங்கள், கனிகள் மற்றும் மந்திர உருவேற்றிய சக்தி வாய்ந்த நீரை பிரசாதமாக பருகக் கொடுத்துவிட்டு, நீங்களும் பருகிக் கொள்ளுங்கள்.
ஆத்ம காயத்ரி மந்திரம் அச்சடிக்கப்பட்ட அட்டையினை, கோயிலுக்கு வந்திருக்கும், அறிமுகம் இல்லாத ஒரு நபருக்காவது வழங்கி, ஒரு முறையாவது மந்திரம் உரைக்க உதவி புரியுங்கள். தங்களால் இயன்ற எண்ணிக்கையில் மந்திர அட்டையினை பக்தர்களுக்கு வழங்கலாம், குறைந்த பட்சம், ஒரு நபருக்காவது வழங்கி ஆத்ம காயத்ரி மந்திரம் உரைக்க உதவி இருக்க வேண்டும். (ஆத்ம காயத்ரி மந்திரத்தினை உரைக்கும் மானுடர்கள் மிகவும் எளிமையாய் அகத்திய மகரிஷிகளின் ஒளிப்பாலத்தோடு இணைந்து முக்தி பெற முடியும் என்பதனை சத்குரு எடுத்துரைத்துள்ளார். எனவே, ஆத்ம காயத்ரி நோன்பு மேற்கொள்ளும் அன்பு ஆன்மாக்கள், ஒவ்வொரு நாளும் தங்கள் ஊரில் வசிக்கின்ற, இதுவரை அறிமுகம் இல்லாத, ஏதேனும் ஒரு நபருக்காவது, ஒரு முறையாவது ஆத்ம காயத்ரி மந்திரத்தை உரைக்க உதவிடல் வேண்டும். இப்படி, ஆத்ம காயத்ரி மந்திரத்தை உச்சரித்ததும், அந்த நபரின் ஆன்மா, சத்குரு அகத்திய மகரிஷிகளின் ஒளிப்பாலத்தோடு இணைந்துவிடும்) பின், அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீடு திரும்பலாம்.
ஆத்ம காயத்ரி நோன்பு எத்தனை தினங்கள் மேற்கொள்ள வேண்டும்?
01.11.2024 அன்று தொடங்கும் நோன்பு 19.12.2024 அன்று நிறைவடைகிறது. ஒருவர் இந்த இரு தேதிகளுக்கு நடுவே எந்த ஒரு தினத்திலும் நோன்பை ஆரம்பிக்கலாம். ஆனால் நோன்பு நிறைவடையும் நாள், சத்குரு அகத்திய மகரிஷிகளின் குருபூஜை தினமான 19.12.2024 (மார்கழி ஆயில்யம்) மட்டுமே. அதிக தினங்கள் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு பலன் அதிகமே!
ஆத்ம காயத்ரி நோன்புத் தொகுப்பின்(KIT) உள்ளடக்கங்கள்
ஸ்ரீ கால பைரவரின் காப்புக்கயிறு.
ஆத்ம காயத்ரி மந்திரம் அச்சிடப்பட்ட அட்டைகள்.
சத்குரு அகத்திய மகரிஷிகள் தலைமையில் அன்பாலயத்தை வழிநடத்தும் 12 உயர் தெய்வங்களின் அஷ்டோத்திர சத நாமாவளி புத்தகம்
நட்டாற்றீஸ்வரர் எனும் அகத்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த விசேஷ திருநீறு. (நோன்புத் தொகுப்பில் பெறப்பட்ட திருநீற்றை வீட்டில் உள்ள திருநீற்றோடு கலந்து வைத்துக்கொள்ளவும்)
ஆத்ம காயத்ரி நோன்பு தொகுப்பை பெற கருணை அங்காடியில் வாயிலாக பதிவு செய்துகொள்ளுங்கள். பதிவு செய்தவர்களுக்கு விரைவில் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
9789032199 l 9361047636 l 7996774757 l 9944170454
நோன்பை அவரவர் இல்லத்தில் தொடர்ந்து செய்யும் முறை
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளில் நீரினை ஏந்தி, “ஓம் ஸ்ரீ ஆதி மூல கணபதியே போற்றி” என்று உரைத்து நீரினை நிலத்தினில் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி மூன்று முறை செய்யுங்கள்.
வீட்டில், பூஜையறையில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து, தினந்தோறும் அவ்விடத்தை நீரினால் சுத்தம் செய்யவும்.
பின், முதல் தினம் மேற்கொண்ட வழிமுறைகளில் எண் 5 முதல் 10 வரை உள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி தினந்தோறும் நோன்பினை தொடருங்கள்.
ஒவ்வொரு நாளும் இல்லத்தில் நோன்பு வழிமுறைகளை நிறைவேற்றியவுடன், அருகில் உள்ள கோயிலுக்கோ அல்லது பொது இடங்களுக்கோ சென்று, ஆத்ம காயத்ரி மந்திரம் அச்சடிக்கப்பட்ட அட்டையினை, உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபருக்கேனும் வழங்கி, ஒரு முறையேனும் அதனை உரைக்க உதவி புரியுங்கள். தங்களால் இயன்ற எண்ணிக்கையில் மந்திர அட்டையினை வழங்கலாம், ஆனால் ஒரு நபருக்காவது வழங்கி, அவர் ஆத்ம காயத்ரி மந்திரம் உரைக்க, உதவியிருக்க வேண்டும்.
நோன்பு நோற்கும் நாட்களில், உங்கள் விருப்பம் போல் ஒவ்வொருநாளும் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஆத்ம காயத்ரி மந்திரத்தினை உச்சரிக்க நீங்கள் உதவலாம். நோன்பு நோற்கும் நாட்களில், அனைத்தையும் சேர்த்து 108, 1008, 10008, 100008 போன்ற எண்ணிக்கையில், நீங்கள் பல ஆன்மாக்களை சந்தித்து அவர்களை ஆத்ம காயத்ரி மந்திரம் உச்சரிக்க வைத்து, விழிப்படையச் செய்திருந்தால் அது மேலும் சிறப்பு வாய்ந்தது.
உதாரணத்திற்கு, 48 தினங்கள் ஆத்ம காயத்ரி நோன்பினை கடைபிடிக்கும் ஒருவர், தினந்தோறும், அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புதிய 21 நபர்களுக்கு ஆத்ம காயத்ரி மந்திரம் அச்சிடப்பட்ட அட்டையினை வழங்கி, அம் மந்திரத்தை ஒரு முறையேனும் உரைக்கச் செய்து விழிப்படையச் செய்திருந்தால், 48 தின இறுதியில் அவர் 1008 நபர்களின் ஆன்மாக்களை விழிப்படையச் செய்து நோன்பினை நிறைவேற்றி இருப்பார். 1008 ஆன்மத் துகள்களையும் பெற்று அதற்கு இணையான ஆன்ம சக்தியினையும் பெற்றிடுவார்.
இல்லத்தில், குருபூஜை யாகம் நிகழ்த்தி நோன்பை நிறைவு செய்யும் முறை
சத்குரு அகத்திய மகரிஷிகளின் குருபூஜை தினமான டிசம்பர் 19 ஆம் நாள் அன்று, மார்கழி ஆயில்ய தினத்தன்று, காலை முதல் மாலை வரை உங்களால் எத்தனை ஆன்மாக்களை விழிப்படையச் செய்ய இயலுமோ, அதனைச் செய்து சத்குரு அகத்திய மகரிஷிகளின் பெரும் பணியினை, ஓர் சிறு துரும்பாக இருந்து இயற்றி, உங்களது சரணாகத நிலைதனை வெளிப்படுத்திய பின், மாலை சூரிய அஸ்தமன நாழிகையில் உங்கள் இல்லத்தில் மஞ்சள் பிள்ளையார் வைத்து வழிபடவும். சத்குரு அகத்திய மகரிஷிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் சூட்டி வழிபடவும். அகத்திய மகரிஷிகளின் திருவுருவப் படம் இல்லாதவர்கள், மஞ்சள் தூளை உருட்டிப் பிடித்து வைத்து சத்குருவாய் பாவித்து வழிபடவும்.
பின், தினந்தோறும் மேற்கொண்ட வழிமுறைகளில் எண் 5 முதல் 8 வரை உள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வழிபடவும்.
உங்கள் முயற்சியால், ஆத்ம காயத்ரி மந்திரம் உரைத்த அனைத்து ஆன்மாக்களும் சத்குரு அகத்திய மகரிஷிகள் ஒளிபாலத்தோடு இணைய வேண்டும் என்ற பிரார்த்தனையைச் செய்து, மூன்று முறை நீர் எடுத்து நிலத்தில் விடுங்கள்.
ஒரு மண் சட்டியில் அல்லது ஒரு தாம்பாளத்தில் மணல் பரப்பி, யாகத்திற்குப் பயன்படுத்தப்படும் சிறிய சமித்து குச்சிகளை வைத்து, அக்னியை வளர்க்கவும். ஒருவர் அக்னிக்கு அருகில் அமர்ந்து, அக்னிக்கு நெய் வார்த்துக்கொண்டே இருக்க வேண்டும், அப்போது அனைவரும் ஆத்ம காயத்ரி மந்திரத்தை ஒன்றிணைந்து ஒரு நாழிகை நேரம் ஜெபிக்க வேண்டும்.
பிறகு, ஒருவர் மட்டும் அக்னியின் அருகில் அமர்ந்துகொள்ள வேண்டும். பூர்ணாகுதிப் பொருட்கள் (poorna aguthi set) அடங்கிய தொகுப்பு ஒன்றை, பூஜைப் பொருட்கள் விற்கும் அங்காடியில் முன்னதாகவே வாங்கி வைத்திருக்க வேண்டும்.
வாங்கி வைத்திருக்கும் பூர்ணாகுதிப் பொருட்களை நான்கு பகுதிகளாக பிரித்து வைத்திருக்க வேண்டும். அங்கு இருக்கும் அனைவரும் பூர்ணாகுதிப் பொருட்களைத் தொட்டு வணங்கிய பின், அக்னிக்கு அருகில் அமர்ந்திருக்கும் நபர், இங்கு இருக்கும் அனைவரது சார்பாகவும் பூர்ணாகுதியை ஸ்ரீ காலபைரவருக்கு சமர்ப்பிக்கின்றோம் என உரைத்து நான்கில் ஒரு பங்கை அக்னியில் வார்க்க வேண்டும். அத்தருணத்தில் அனைவரும் “ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி” என்று உரைத்து ஆகுருதிகளை சமர்ப்பணம் செய்யும் வரை தங்கள் நன்றியை சமர்ப்பணம் செய்ய வேண்டும். இதே முறையில், ஆதி சக்தி, ஆதி சிவன் மற்றும் சத்குரு அகத்திய மஹரிஷிகள் ஆகிய மூவருக்கும், தனித் தனியாக பூர்ணாகுதி சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
பின், வளர்த்திட்ட அக்னியானது தணியும் வரை, பூஜையில் கலந்து கொண்ட அனைவரும், கண்களை மூடி, சத்குரு அகத்திய மகரிஷிகளை மனதில் எண்ணியே தியானித்து, ஒரு நாழிகை நேரம் (24 நிமிடங்கள்) அமர்ந்திருங்கள்.
பிறகு, முக்கோண அமைப்பில் வைக்கப்பட்டுள்ள தீபங்களுக்கும், சத்குரு அகத்திய மகரிஷிகளின் திருவுருவப்படத்திற்கும் தூப தீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தி, சத்குரு அகத்திய மகரிஷிகளின் ஆசிகளைப் பூரணமாகப் பெற்றிடுங்கள்.
இறுதியாக, பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமாக அன்ன ஆகாரங்கள் கனிகள் மற்றும் நீரினை வழங்குங்கள், அன்று இரவு அருகில் உள்ள முதியோர் இல்லம், கோசாலை போன்ற இடங்களுக்கு சென்று அன்னப் பிரசாதத்தை வழங்குங்கள்.
“ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி” என்று 3 முறை உரைத்து, ஸ்ரீ காலபைரவரின் காப்புக் கயிற்றினை அகற்றி, நீர் நிலைகளில் சமர்ப்பித்து, ஆத்ம காயத்ரி நோன்பினை இனிதே நிறைவு செய்திடுங்கள்.
Frequently Asked Questions
1.ஆத்ம காயத்ரி நோன்பினை அவரவர் இல்லங்களில் இருந்தே துவக்கலாமா?
விநாயகர் கோயிலுக்குச் சென்று ஆத்ம காயத்ரி நோன்பினைத் துவக்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது, எனினும், அவரவர் இல்லத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்தும் நோன்பினைத் துவக்கலாம்.
2.முக்கோண வடிவ தீபத்திற்கு, மரப்பலகையைத் தான் ஆசனமாக பயன்படுத்த வேண்டுமா?
மரப்பலகையை பயன்படுத்த இயலாதவர்கள், இல்லங்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் தட்டு அல்லது வாழை இலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3.ஆத்ம காயத்ரி நோன்பினை எந்த நேரத்தில் துவக்க வேண்டும்?
சூரிய உதயத்திற்குப் பிறகு, முற்பகல் பொழுதுகளில் நோன்பினைத் துவக்குவது சிறப்பு வாய்ந்தது.
4.வரையப்படும் முக்கோணத்திற்கு அளவு முறை ஏதேனும் இருக்கின்றதா?
மூன்று புள்ளிகளை வைத்து அரிசி மாவினால் இணைக்கும் முக்கோண வடிவத்திற்கு எந்த ஒரு அளவுகோலும் இல்லை, இருப்பினும், நீர் எடுத்து முக்கோண வடிவத்தில் மையத்தில் விட வேண்டும் என்பதினால் அதற்குத் தகுந்தாற் போல் முக்கோண வடிவத்தின் அளவினைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
5.ஒவ்வொரு நாளும் முக்கோண தீபத்தினை ஏற்றுவதற்கு முன் அவ்விடத்தை நீரினால் தூய்மையுறுத்த வேண்டுமா?
ஆம், ஒவ்வொரு நாளும் ஆத்ம காயத்ரி நோன்பினைக் கடைப்பிடிப்பதற்கு முன்னதாக அவ்விடத்தை தூய்மை செய்து பின் பூஜையைத் துவங்கவும்.
6.ஏற்றி வைக்கும் தீபம் எவ்வளவு நேரம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்?
ஓர் அகல் விளக்கில் ஒரு முறை ஊற்றிய எண்ணெய் தீரும் வரை தீபம் ஒளிர்ந்தால் போதுமானது.
7.ஆத்ம காயத்ரி நோன்பு நோற்றவர் அவசரப் பணியாக பயணப்பட்டால் அன்று என்ன செய்வது?
நோன்பினை கடைபிடிக்க இயலாத நாட்களில், மானசீகமாக தீபங்களை ஏற்றி மனதிற்குள் வழிபாடுகளை நடத்துங்கள்.
8.48 தினங்களில் ஏதேனும் ஒரு நாளை தவறுதலாக நான் விட்டு விட்டால் என்ன செய்வது?
அடுத்த நாளிலிருந்து சீராகத் தொடரவும்.
9.ஆத்ம காயத்ரி நோன்பின் போது மது அருந்தலாமா? மாமிசம் உண்ணலாமா?
கண்டிப்பாகக் கூடாது.
10.ஆத்ம காயத்ரி நோன்பிற்கு, மண் குவளையைத் தான் பயன்படுத்த வேண்டுமா?
மண் குவளை இல்லையெனில், வேறு எந்த ஒரு பாத்திரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
11.மாதவிடாய் காலங்களில் ஆத்ம காயத்ரி நோன்பைக் கடைபிடிக்கலாமா?
சித்தர் வழிபாட்டில் இதற்கு எந்தத் தடையும் இல்லை.
12.ஆத்ம காயத்ரி நோன்பின் போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?
விரதம் கடைபிடித்தால் ஆத்ம காயத்ரி நோன்பு அதிக பலன்களை நல்கும்.
13.காலையில் எழுந்தவுடன் குளிக்காமல் நோன்பின் மந்திரத்தை உச்சரிக்கலாமா? எந்த நேரத்தில் உரைக்க வேண்டும்?
குளிக்காமல் மந்திரம் உரைக்கக் கூடாது. காலை மாலை என எந்த நேரத்திலும் மந்திரம் உரைக்கலாம்.
14.எத்தனை வயதிற்கு மேற்பட்டோர் இந்த ஆத்ம காயத்ரி நோன்பினைக் கடைபிடிக்க வேண்டும்?
பதினைந்து வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே கடைப்பிடிக்கலாம்.
15.மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது கண்கள் மூடி இருக்க வேண்டுமா?
கண்கள் எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மந்திரத்தை உரக்க உரைக்க வேண்டும்.
16.நோன்பின் போது கடைபிடிக்க வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகள் ஏதேனும் உள்ளதா?
திட உணவைக் குறைத்து, கனிகள் மற்றும் நீர் சார்ந்த உணவுகளைப் பருகினால் மிகுந்த பலன் கிட்டும்.
17.தினம்தோறும் எந்தெந்த கனிகளை தீபங்களுக்குப் படைக்க வேண்டும்?
இரு வாழைப்பழங்களை மட்டும் படைத்து உண்டாலும் நற்பயனே விளையும். உங்கள் சூழலுக்கு ஏற்ப படைத்து, பிரசாதமாக உண்ணவும்.
18.கோயிலுக்கு ஆத்ம காயத்ரி நோன்பினைத் துவக்கச் செல்பவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக முக்கோண வடிவ தீபங்களை ஏற்ற வேண்டுமா?
ஆம், ஒவ்வொரு நபரும் தனித்தனியே முக்கோண வடிவ தீபங்களை ஏற்றித் துவக்க வேண்டும்.
19.கரிசிலாங்கண்ணி மூலிகையினை எவ்வாறு உண்ண வேண்டும்?
கரிசலாங்கண்ணி மூலிகையை இலையாகவோ, பொடியாகவோ, லேகியமாகவோ உட்கொள்ளலாம். ஆயினும் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானார், கரிசலாங்கண்ணி மூலிகையைப் பயன்படுத்தி, "ஜீவகாருண்ய சுத்தி" எனும் அற்புதமான மருந்து தயாரிக்கும் முறையினை வழங்கி உள்ளார். அன்பாலய இணையதளம் மூலமாக அதை அறிந்து பயன்படுத்திக் கொள்ளவும்.
20.கையில் நீர் ஏந்தி முக்கோண வடிவத்திற்குள் சமர்ப்பிக்கும் பொழுது தீபங்கள் அணைந்து விட்டால் என்ன செய்வது?
முக்கோண வடிவத்தின் அளவினை பெரிதாக வரைந்து, விளக்குகளை தூரமாக வைப்பதன் மூலம் தீபங்கள் அணையாமல் காக்கப்படலாம். ஒருவேளை, அப்படி அணைந்துவிட்டாலும் மீண்டும் ஏற்றிக் கொள்ளலாம். எந்தத் தீங்கும் இல்லை.
21.தினம்தோறும் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் அக்ஷதையை என்ன செய்வது?
வழிபாடு முடிந்ததும் அக்ஷதையை அன்னம் தயாரிக்கும் பொழுது அதனோடு சேர்த்து சமைத்துக் கொள்ளவும்.
22.விளக்குகளில் குறிப்பிட்ட வகை எண்ணெய் ஊற்ற வேண்டும் என்கிற வழிமுறை உள்ளதா?
இல்லை, சுத்தமாக தயாரிக்கப்பட்ட செக்கு எண்ணெய் பயன்படுத்துவது மேலும் சிறப்பானது.
23.நோன்பு நோற்ற நாளில், ஆத்ம காயத்ரி மந்திரம் அச்சிட்ட அட்டையை எவருக்கும் வழங்காமல் மறந்து போய் விட்டால் என்ன செய்வது?
கவலை வேண்டாம், அடுத்த தினம் மறந்து விட்ட தினத்திற்கும் சேர்த்து, மந்திரம் அச்சிட்ட அட்டைகளை வழங்கி மந்திரத்தினை பலருக்கு உபதேசம் செய்யுங்கள்.
24.என் வீட்டில் இருக்கும் வயதான பெற்றோரால், கோயிலுக்குச் சென்று, முன்பின் அறியாத நபருக்கு ஆத்ம காயத்ரி மந்திரத்தினை உபதேசிக்க இயலாத நிலை உள்ளது என்ன செய்வது?
அலைபேசியின் வாயிலாக, தனக்குத் தெரிந்த உற்றார் உறவினர்களுக்கு உபதேசிக்கலாம், எத்தனை அதிகம் பேருக்கு ஆத்ம காயத்ரி மந்திரத்தை உபதேசிக்க இயலுமோ, அத்தனை பேருக்கு உபதேசம் செய்தல் சிறப்பு.
25.வெளிநாடுகளில் வசிக்கும் எங்களால் அக்னி வளர்த்து, குருபூஜையைச் செய்ய இயலாத சூழலில், என்ன செய்வது?
முக்கோண வடிவ விளக்குகளின் மத்தியில் சூடத்தினை பயன்படுத்தியோ அல்லது மற்றும் ஒரு விளக்கை ஏற்றியோ அதன் அருகில் அமர்ந்து, ஆத்ம காயத்ரி மந்திரத்தை ஒரு நாழிகை நேரம் உரைத்து, குருவுக்கு நன்றியை சமர்ப்பணம் செய்யுங்கள்.
சத்குரு அகத்திய மகரிஷிகள் அருளிய ஆத்ம காயத்ரி நோன்பின் பலா பலன்கள்
ஆத்ம காயத்ரி நோன்பினை அன்புடன் உவந்து ஏற்போரும், பாங்குடனும், பக்தியுடனும் நோன்பு இயற்றி யாம் உரைத்திட்ட வண்ணமே செயலாற்றி பூர்த்தியுற செய்பவர்களும், பூரண ஞானம் பெற்று, இறைவனை உணர்ந்து ஒன்று கலக்கும் பாக்கியம் பெறுவர். புவி வாழ்வின் எல்லையில் முற்றிலும் உணர்ந்த நிலையில் பூத்திடுவர். தெய்வங்களோடு அறிந்து, உணர்ந்து ஒன்று கலப்பர்.
எவரெல்லாம் ஆத்ம காயத்ரி நோன்பினை உவந்து ஏற்கின்றனரோ அவர்கள் யாவருமே பூரண முக்தி அடையும் மார்க்கம் அறிந்தவர்களாவர். ஆதிசிவனின் பூரண அருட்கடாக்ஷம் பெற்றவர்களாவர். அகப்பயணத்தில் வெற்றி பெறும் பாக்கியம் புரிந்தவர்களாவர்.
உவந்த நிலையில் ஏற்று பக்தி சரணாகதத்துடன் நோன்பு இயற்றுபவர்களின் அகநோக்கம் என்பது இறைப்பணிதனை ஏற்பதாகவே அமைந்திருக்கும். மானுட குலம் உய்வுற வேண்டும், ஆன்மாக்கள் விண்ணேறிடல் வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தினை நோன்பு இயற்றுபவர்கள் எளிதாய்ப் பெற்றிடுவர். அகவாழ்வு உயர உயர புற வாழ்வும் சிறந்து விளங்கும்.
உள்ளுணர்வுகளை ஏற்றுச் சூழ்கின்ற மானுட ஆன்மாக்களுக்கு ஆத்ம காயத்ரி மந்திரம் உரைத்து, விழிப்படையச் செய்வோருக்கு, ஆதிசக்தியின் பூரண ஆசிகள் கிட்டும். சக்தியின் ஆற்றல்கள் கிட்டினால் மனிதர்களின் இயக்கமும் பூரணமடையும். அக வாழ்வும், புற வாழ்வும் சக்தியின் ஆற்றல்களின் மூலம் மலர்ச்சி அடையும்.
தேவைகள் முழுமை அடைவதனையும் கர்ம வினைகள் பலவும் தீர்வுறுவதனையும் உணர்ந்திடுவர். அகச் செல்வமும், புறச் செல்வமும் பெருகும்.
அகத்தினில் ஆன்ம ஒளி பெருகி, மனமானது ஒளியினால் ஈர்க்கப்பட்டு இலயிப்புறும். புறத்தினில் இயக்கமானது பூரணமாய் மலர்ந்து, மனமானது மகிழ்வினை எய்திடும் செயல்களும் நிகழ்ந்தேறிடும்.
ஒவ்வொரு மானுட ஆன்மாக்களையும் விழிப்படையச் செய்வது ஒன்றே உயரிய இறைப்பணியாகும். எமது அன்பு சீடர்கள், தெய்வங்களின் யுக மாற்றப் பணிக்கு பூரண உதவிகளைப் புரிவதன் மூலம் தெய்வப்பதங்களை அடைவர்.
அன்பு சீடர்களின் மூலம் எமது ஒளிப்பாலத்தினில் இணைக்கப்படுவோர் யாவரும் அறியாமைத் திரை விலகி, ஈசனின் பர உலகினில் பிரவேசிக்கும் பாக்கியம் பெறுவர்.
எமது அன்பு சீடர்கள் மற்ற மானுட ஆன்மாக்களுக்கு விழிப்புணர்வினை நல்கிடும் ஆத்ம காயத்ரி மந்திரத்தினைப் போதித்து நின்றிட்டால் அனைவரும் எமது ஒளிப்பாலத்தினில் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு உகந்த தெய்வங்களின் ஒளிப்பாலத்தினிலும் பிணைக்கப்பட்டு எளிதாய் முக்தி பெறுவர்.
எமது அன்பு சீடர்களின் மூலம் புதியதாய் ஒளிப்பாலத்தோடு இணைக்கப்படும் ஆன்மாக்கள் ஓர் காந்த சக்தி நிறைந்த ஈர்ப்பு நிலையை உணர்ந்திருப்பர். மேலும் புற வாழ்வில் பல தடைகள் விலகிடக் காண்பர். அகவாழ்வு என்பது பூரணமாக திறவு கொள்ளும். ஆன்மாவானது ஈசனை நாடியே பயணிக்கத் துவங்கும். அதன் பொருட்டே நிறைவேறிடாத பற்பல நிலைகள் புறத்தினிலும் எளிதாய் நிறைவேறிடும். அருட் செல்வம் பெருகினால் புறச்செல்வமும் பெருகிடும். ஏற்போர் யாவரும் ஓர் புதிய பரிணாமத்தில் மலர்ச்சி அடைவர். பிரளயக் கால அழிவுகளிலிருந்தும் காக்கப்படுவர்.
ஆதி சிவனார் அருளிய ஆத்ம காயத்ரி நோன்பின் பலா பலன்கள்
அழிவுறக் காத்துள்ள நிலையினை உணர இயலாத நிலையே சித்திக்கின்ற கலி எல்லை காலத்தினில் மானுடர்களை விழிப்புற செய்வதொன்றே பெரும் பலனளிக்கும். விழிப்பு நிலையினை ஏற்றவர்கள் அனைவரும் ஒன்று கூடி, உணராத ஆன்மாக்களை விடுவிக்க உதவிடல் வேண்டும்.
பல்வேறு மார்க்கங்களில் முக்தி அடைந்திட பயணிப்போரும் ஒரு முறை அகத்தியரின் ஆத்ம காயத்ரி மந்திரத்தினை எடுத்துரைத்தால் எளிதாய்த் தங்களது பயணத்தின் எல்லையினை அடைவர்.
இறைப்பணி ஏற்போரே தெய்வங்களாலும் போற்றப்படுவர். மாபெரும் இறைப்பணியினை ஏற்று இயங்காமல் இயங்கும் அகத்திய பெருமானுக்கு தொண்டர்கள் ஆற்றும் பணியே சாலச் சிறந்த பணியாகும். அத்தகைய அடியோருக்கே யாம் அடியவர் ஆவோம். எனில் மானுட ஆன்மாக்களை மீட்டுவிட அகத்திய மகான் உருவாக்கிய ஓர் உன்னத இறைப்பணியே ஆத்ம காயத்ரி நோன்பு என்பதாகும்.
மனம் ஒடுங்கவும், அமைதியுறவும் உதவிடும் இம்மந்திரமானது, உயிருக்கு நம்பிக்கை ஊட்டும். அழிவிலிருந்து காக்கப்படுவோம் எனும் சத்தியத்தினை உயிர்கள் உணர்ந்து கொள்ளும்.
நன்னெறிகள் வளரும்; நற்குணங்கள் ஓங்கும்; கழிவுகள் நீங்கி அழிவிலிருந்து காக்கப்படும் ஆன்மாக்கள் அகப்புறத் தேவைகளும் பூர்த்தியுறக் காண்பர்.
மதி மயக்கம் நீங்கவும், மானுடம் தழைக்கவும் ஆன்மாக்கள் ஈசனைச் சென்றடையவும் அனைவரும் முயன்று செயலாற்றி, பிறரையும் தூண்டுகின்ற முயற்சியினையும் ஏற்கக் கடவது.
“இதனைக் காட்டிலும் ஓர் எளிய மார்க்கத்தினை மானுடம் விழித்தெழ, எவரும் இயற்றி விட இயலாது என்றுணர்ந்து, சரணாகத நிலையில் உயர்ந்து, அடியவர்க்கு அடியவராய் எமை உருமாற்றிடுங்கள்”
ஆதி சக்தி அருளிய ஆத்ம காயத்ரி நோன்பின் பலா பலன்கள்
கலி நிறைவடைய உள்ளது; அழிவு துவங்குகிறது; பிரளயம் நெருங்குகிறது என்றெல்லாம் இறைவன் விடுக்கும் எச்சரிக்கைகள் மனித அறிவினைத் தீண்டாததற்கான மூலகாரணம் அறிவு ஏற்றுள்ள அதீதப் பதிவுகளே. அனைத்து நிலைகளையும் மாற்றவல்ல ஓர் அற்புத ஆயுதம் என்பது அகத்தியர் அருளியுள்ள மந்திரச் சொற்களே.
எத்தகையதோர் வலுவான செவித்திரையினையும் நீக்கும் வல்லமை பெற்ற பெரும் ஆயுதமே, அகத்தியர் அருளிய ஆத்ம காயத்ரி மந்திரம் ஆகும். இறைவனின் அழைப்பு ஒலிக்கின்றது எனில் காலக்கெடு நிறைவடைந்தது என்றே பொருள்படும். ஆன்மாக்கள் செவிகளில் ஓதப்படும் இம்மந்திரத்தின் மூலம் பலரது அகச்செவிகள் தீர்க்கமாய் திறவு கொள்ளும். புவியின் மாற்று திசையினில் எழுகின்ற ஓசைகளையும் ஏற்றுவிட இயலும். அண்டத்து ஆதார நிலைகளையும் ஓசையின் துணை கொண்டு அறிந்திடலாம்.
எனில் ஆத்ம காயத்ரி மந்திரமே கலியுகத்தினை நிறைவு செய்து சத்திய யுகத்தினைத் திறவு கொள்ளச் செய்திடும் அதி அற்புத மந்திரம் ஆகும். அன்பு சீடர்கள் அனைவரும் இம்மந்திரம் தனை கூவியே உரைத்திட உட்செவி திறவு கொள்வதனை உணர்ந்திடுவர். பிறர் செவிகளில் ஓதுகின்ற தருணத்திலும் நற்பலன் பெறுவர். செவிகளில் மோதி
எதிரொலிக்கும் இம்மந்திரச் சொற்களே ஆன்மாக்களை ஈர்த்து ஒளிப்பாலத்தினில் இணைத்து விண்ணேற்றிடவும் உதவிடும். கருணையோடு மானுட ஆன்மாக்களைக் காத்துவிட தெய்வ நிலைகள் எழுச்சியோடு இயங்கும் காலம் இது.
அகத்தியரின் கருணையினால் ஆன்மாக்கள் தழைக்கின்றன; விடுதலை பெறுகின்றன. எனில் யாவரும் உணர்ந்து செயலாற்றக் கடவது. ஆத்ம காயத்ரி மந்திரத்தினை ஒரு மண்டல காலத்திற்கு ஓயாது இசைத்திருப்போர் உட்செவி திறவு கொண்டு ஆன்மாவின் உள் ஒளியைத் தரிசனம் காண்பர். ஆன்மா உரைக்கும் அன்பு மொழிகளைச் செவிமடுப்பர். எவ்விதம் உணர்வது? எவ்விதம் அறிவது? அனுதினமும் உங்களுடைய செவிகளைத் தீண்டி உட்செல்லும் சொற்களைக் கண்காணியுங்கள். அவை யாவும் மலர்ச்சி ஊட்டுபவையாகவே விளங்கிடும்.
அருமருந்தாகவும், ஆனந்தமூட்டும் சொற்களும் உட்கடந்து செல்வதனை உணரலாம். ஆன்ம பலம் கூடும். உயிரும் அதனைச் சார்ந்த உடலும் பொலிவுறும்.
ஆத்ம காயத்ரி மந்திரம் தனை அர்ச்சித்து, ஆராதித்து ஒரு மண்டல காலம் நோன்பாய் ஏற்றுப் பூஜிப்பவர்கள் வாழ்வினில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி மலர்வதனை உணரலாம். எந்த ஒரு செயலினையும் ஒரு மண்டல காலத்திற்கு உணர்வோடு ஏற்போர் நித்திய சுகம் பெறுவர்.
உங்களால் போதிக்கப்படும் ஆன்மாக்களும் பலன் பெறுவர். இவற்றின் பலன் குறித்து அறிய வேண்டுமெனில், பிரளய காலம் வலுக்கும் வரை காத்திருக்க வேண்டும். காக்கப்படும் ஆன்மாக்கள் சத்தியம் உணர்வர்.
இயற்றிய ஒவ்வொரு செயல்களும் உயரிய பலனை ஈட்டியே அருளிடும். தாயுள்ளம் கொண்டு கருணையோடு அனைவரும் செயல்பட்டு பெரும் ஆன்மாக்கள் கரைசேர்ந்திட கூடியே இறைப்பணி ஆற்றிடுங்கள்!
ஒரு மானுடர் இறைவனுக்கு எத்தகைய உதவிகளை ஆற்றிட இயலும்?
ஆலயங்களை உருவாக்கி பராமரித்திட இயலும். ஆன்றோரும் சான்றோரும் ஒன்று கூடி காவியங்களை உருவாக்கிடவும் இயலும். பசித்தோருக்கு அன்னமிடுவதும் இறைப்பணியே. எனினும், உணர்ந்து செயல்புரிய வேண்டும். பிரளயத்தில் அழியக் காத்துள்ள ஆன்மாக்களுக்கு அன்னமிடுவதனைக் காட்டிலும், ஞானம் புகட்டுவதனைக் காட்டிலும், விழிப்புணர்வு ஊட்டி விண்ணேற்றுவதே பெரும் துணையாகும். கலி எல்லை எனப்படும் ஊழிக் காலத்தினில் ஆன்மாக்கள் காக்கப்பட வேண்டியதே அதிஉன்னத செயலாகும்.
ஆத்ம காயத்ரி நோன்பு தொகுப்பை பெற கருணை அங்காடியில் வாயிலாக பதிவு செய்துகொள்ளுங்கள். பதிவு செய்தவர்களுக்கு விரைவில் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
9789032199 l 9361047636 l 7996774757 l 9944170454