அன்பு

கருணை

 காருண்யம்


 அன்பாலயம்அனந்தகோடி அன்புகள்.

அன்பாலயத்தின் தலைமை மற்றும் முதன்மை குரு 

அகத்திய மகரிஷிகள்  

அன்பாலயத்தின் நோக்கம் என்ன என்று அகத்திய மகரிஷிகள் உரைத்தது 

அன்பாலயத்தின் நோக்கம்


 

அன்பு ஆலயம் என்பது ஞானத்தின் உச்சத்தை வெளிப்படுத்துகின்ற இல்லமாகும். பூரண ஞானம் எய்துவோர்  யாவரும் எல்லையற்ற அன்பினில் திளைத்திருப்பர். 

 

அன்பாலயம் எனும் இல்லமானது, தேவர் உலகினை காட்டிலும் உயர்வானது. தூய அன்பு என்பது ஆன்மாவிடமிருந்து  மாத்திரமே பொழியப்படும். ஆன்ம லயத்தினில் வீற்று இயங்குபவர்கள் யாவருமே அன்பினை தன்னிச்சை செயலாய் வெளிப்படுத்துவர். கருணை எனும் இறைவனின் பேரறிவும் உட்கலக்க துவங்கிவிடும்.


 

அன்பாலயத்தின் நோக்கம் என்பது ஆன்மாவினை உணர்ந்து, அதன் இயக்கத்தில் ஐக்கியமாகிட, மானுட ஆன்மாக்களுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கும். பிறருக்கு கற்பிக்கப்பட இயலாத கல்வி என்பதே அன்பாகும். அன்பினை போதிக்கவோ, கற்று அறியவோ எவராலும் இயலாது. இருப்பினும் எவரெல்லாம் ஆன்மாவின் இருப்பு நிலையாகிய  பூரண அன்பினில் மூழ்கி செயல் புரிகின்றனரோ அவரெல்லாம் அன்பினை இயற்கையாக வெளிப்படுத்தும் போதகர் ஆகின்றனர். கற்று அறிந்தவர் ஆசிரியராகலாம்.  உணர்ந்து பரப்புபவரே குருவாக இயலும் ஆன்மாவினை முழுமையாக உணர்ந்தவர்களால் ஆன்ம இயக்கமாகிய அன்பு எனும் ஆற்றலினால் மாத்திரமே இயங்கிட இயலும். 

 

அன்பாலயம் என்பது ஞானத்தினை முழுமையாகப் பெற்றவர்களின் ஆன்மாவின் ஒளிர்தலை வெளிப்படுத்தும்.


 

அன்பாலயத்தின் உன்னத நோக்கம் என்பது உயிர் நிலையில் நின்று அதன் மலர்ச்சிக்கு பாடுபடுபவர்களை எளிதாய் ஈர்த்துப் பூக்க வைப்பதாகும். உடற்பிணிகளால் அவதிவுறுவோர் யாவரும் உடல் கடந்து உயிரினை தீண்டிடவும்  வழிவகை புரியும். ஆன்மாவின் அன்பினை உணரும் வரை மனிதர்களுக்கு வழிகாட்டுவதே அன்பாலயத்தின் நோக்கமாக அமைந்திருக்கும்.

 

ஆன்மாவின்று வெளிப்படும் பூரண அன்பு ஒன்றே மானுட குலம் உய்வுற  உதவிட இயலும். ஒரு ஆன்மா பூத்திட்டால் பல கோடி ஆன்மாக்கள் பலன் பெறும். ஆன்மாக்களை பூக்க வைக்கும் ஆற்றல் ஆதி சிவனுக்கும், சக்திக்கும் மாத்திரமே உண்டு. அன்பாலயம் எனும் இல்லத்தில் பிரவேசிப்பவர்கள் சிவசக்தி கலப்பு காண்பர்.  உயிரானது ஆன்மாவினில் ஒடுங்குவதனையும், ஆன்மாவானது  உயிரோடு பூரண கலப்பு கொண்டு நிறைவினை நல்குவதனையும் உணர்ந்திடுவர்.  மனிதர்களுக்கு  கிடைப்பதற்கரிய  பேருதனை பெற்றிடவும் தன்னிலை உணர்ந்து படிநிலைகளில் உயர்ந்து ஆன்மாவோடு பூரண கலப்பு கொண்டிடவும் அன்பாலயம் எனும் இல்லம் உதவிடும். இறுதியில் பரமாத்மாவே பூரணமாய் உதித்து ஜோதியின் வடிவினில் அன்பாலய ஆன்மாக்களை ஈர்த்து சென்றிடுவார்.

 

அன்பாலயத்தில் பிரவேசித்தால் ஆன்மாவின் வாயில்கள் திறவு கொண்டு சத்திய யுகத்தினில் பிரவேசித்திடலாம்.

 

தன்னை உணர்பவன் தன் ஆன்ம நிர்ணயங்களையும் எளிதாய் உணர்ந்து கொள்ள இயலும். எந்த ஒரு படி நிலையில் மனிதர்கள் இயங்கினாலும் அன்பு எனும் ஆற்றலின் துணை கொண்டு அவர்களை கரை சேர்த்து விட இயலும். பரமாத்மா எனும் பேரருளினை எய்திட முனைவோர் யாவரும் அன்பின் இல்லத்தில் பிரவேசித்து, அதன் மூல மையக் கருவறையான ஆன்மாவினை தரிசித்து, உணர்ந்து, புணர்ந்து, எழுச்சியுறுவர் என்பதே சத்தியமாகும். 

⓽ 

படிநிலைகளில் உயர்வோர் பரமனை அடைவர். அன்பினில் திளைப்போர், ஆன்மாவினை உணர்வர். ஆன்ம லயத்தினில் மூழ்கிட, பரம காருண்ய ஆற்றலில் கரைந்திடுவர். கரைவோர் யாவரும் கரைசேர்வர், கரை சேர்வோர் யாவரும் ஈசனுள் கரைந்திடுவர். கரையவும், கரை சேரவும் அன்பாலயத்தை நோக்கிய ஆன்ம பயணத்தை அனைவரும் மேற்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்! ஆசிகள் பலப் பல.

அருளியவர்

அகத்திய மகரிஷிகள்

அன்பாலயத்தை வழிநடத்தும் உயர் ஆற்றல்கள்.